பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 270 கன அடியாக குறைந்தது
- கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.
- சோழவரம் ஏரியில் 1081 மி.கனஅடியில் 763 மி.கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து ஏரி வேகமாக நிரம்பியது. இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் மழை இல்லை. எனினும் ஆந்திரா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை நீர் பூண்டி ஏரிக்கு நேற்று 700 கனஅடி வரை வந்தது.
இதனால் பூண்டி ஏரி அதன் மொத்த உயரமான 35 அடியை எட்டியது. முழுகொள்ளளவான 3231 மில்லியன் கனஅடி முழுவதும் நிரம்பியது.
இந்த நிலையில் ஆந்திரா பகுதியிலும் தற்போது பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு தண்ணீர் வரத்து 270 கன அடியாக சரிந்தது. இதையடுத்து உபரிநீர் 2 ஷட்டர்கள் மூலம் வினாடிக்கு 675 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 3066 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 3241 மி.கனஅடியும், சோழவரம் ஏரியில் 1081 மி.கனஅடியில் 763 மி.கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து 200 கனஅடிக்கும் கீழ் குறைந்து இருக்கிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள 1146 ஏரிகளில் 869 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. மேலும் 123 ஏரிகள் 75 சதவீதமும், 72 ஏரிகள் 50 சதவீதமும், 75 ஏரிகள் 25 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் கீழேயும் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.