சென்னையில் மின்தடை ஏன்?- மின்வாரியம் விளக்கம்
- சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது.
- சென்னையின் முக்கிய சேவையான மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையிலும், 400/23 கிலோவாட் மின்சார பாதையிலும் திடீர் பழுது ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் உயர் அழுத்த மின் வழித்தடத்தில் ஏற்பட்ட லேசான உராய்வும், அதனைத்தொடர்ந்து வெடித்த தீப்பொறிகளுமே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த பழுதின் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது.
சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, சென்டிரல், மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை, நந்தனம், பெருங்குடி, தியாகராயநகர், சூளைமேடு, வில்லிவாக்கம், அயப்பாக்கம், திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட நகரின் பல இடங்கள் இருளில் மூழ்கின.
ராயபுரம், துறைமுகம், ஆர்.கே.நகர், தண்டையார்ப்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், பெரம்பூர், கொடுங்கையூர், ஓட்டேரி என வடசென்னை பகுதிகள் முழுவதுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று இரவு தூக்கத்தை தொலைத்து மக்கள் திண்டாடி போனார்கள். மக்கள் அனைவருமே மின் நிலையங்களையும், மின்னக கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்புகொண்டு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர். முக்கிய சாலைகளும் இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்தனர்.
சென்னையின் முக்கிய சேவையான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை - மயிலாப்பூர் இடையிலான பறக்கும் ரெயில் நிலையங்கள் அனைத்துமே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கின. இருள் சூழ்ந்திருந்ததின் காரணமாக ரெயில்களும் மெதுவான வேகத்திலேயே இயக்கப்பட்டன. பயணிகள் செல்போன் வெளிச்சத்திலேயே ரெயில்களில் பயணித்தனர்.
பின்னர் சில மணி நேரத்தில் மின்வெட்டு சரி செய்யப்பட்டது. மின்வெட்டால் நேற்று இரவு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்தடைக்கான காரணம் குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்தால் மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் ஏற்பட்ட மின்தடை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் சரி செய்யப்ட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து மருத்துவமனை அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.