சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க. - கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் இபிஎஸ்
- அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
- கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக தனது வியூகப் பயணத்தை கோவையில் இருந்து தான் ஜெயலலிதா தொடங்கினார்.
கோவை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஆளும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க, என அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயும் 2026 தேர்தலே இலக்கு என்று கூறி அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதனால் 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படுவதற்கான நிலை உருவாகி உள்ளது.
2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2026 தேர்தலில் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை மக்களிடம் நேரடியாக எடுத்து சொல்லி, மக்களின் குறைகளையும் கேட்டறிவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் விரைவில் தொடங்க உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தை கொங்கு மண்டலமான கோவையில் இருந்து தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக தனது வியூகப் பயணத்தை கோவையில் இருந்து தான் ஜெயலலிதா தொடங்கினார். அவரது வழியை பின்பற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையிலிருந்தே தொடங்குகிறார்.
2006-2011 வரை தி.மு.க. ஆட்சியில் நடந்த மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் அ.தி.மு.க. பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரில் வந்து தலைமை தாங்கி, தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. கோவையில் தொடங்கிய இந்த பயணத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்திய அவர், இதனை தேர்தல் பிரசார பயணமாகவும் மாற்றிக் கொண்டார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் சென்டிமென்டாக கோவை வ.உ.சி. மைதானத்தில் இருந்தே தொடங்கினார். இப்படி மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களே 2011-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு அடித்தளமாக அமைந்தது.
அந்த வகையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 இடங்கள் வீதம், கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து 20 இடங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த சுற்றுப்பயணத்தின்போது தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறுவதுடன், அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்ட ங்களையும், வளர்ச்சியையும் மக்களிடம் எடுத்து கூறுகிறார். மக்களை சந்திக்கும்போது, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிய உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தியதற்காக நாளை மறுநாள் (9-ந் தேதி) அன்னூரில் அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த பாராட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
பாராட்டு விழா முடிந்த சில நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் தொடங்கும் புரட்சி தமிழர் பழனிசாமியின் பிரசார பயணம் மாநில அளவில் பேசுபொருளாக மாறும். இது கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும்.
அன்னூர் பாராட்டு விழாவிலும், கோவை சுற்றுப்பயணத்திலும் திரளப்போகும் மக்களின் பெரும் திரட்சியானது மீண்டும் அ.தி.மு.க. அதிகாரத்துக்கு வர முன் அறிவிப்பாக இருக்கும்
2010-ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அதேபோன்று பெரும் தொடக்கத்தை பழனிசாமியின் கோவை சுற்றுப்பயணம் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.