பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை- முதலமைச்சர் கொண்டு வந்த சட்ட திருத்தம் நிறைவேற்றம்
- காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
- தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.
சென்னை:
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை மற்றும் தண்டனையை அதிகரிக்கும் 2 சட்ட மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த சட்ட மசோதாக்கள் மீது சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்
அதன் விவரம் வருமாறு:-
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில்,
இந்த சட்டம் தமிழகத்திற்கு மிக முக்கியமான சட்டம். சிறுமிகளை, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் முதல் பின் தொடர்வோருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் அருமையான சட்டம். ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்றார்.
தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) கூறுகையில்,
மரண தண்டனை குறித்து உலகம் முழுவதும் பல்வேறு கருத்துகள் பரவிவரும் நிலையில் அது குறித்து மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) கூறுகையில்,
இந்த தண்டனைகள் விரைவாக கிடைப்பதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா? கடுமையான தண்டனைகள் இருந்தாலும் விரைவாக கிடைக்காத காரணத்தினால் குற்றங்கள் பெருகுகின்றனர். சட்டத்திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கூறுகையில்,
பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்படும் நோக்கத்தில் தண்டனையை அதிகரித்து முதலமைச்சர் கொண்டு வந்த மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்தால் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. விழிப்புணர்வு பிரச்சாரம், பாடத்திட்டத்தில் பாலியல் சமத்துவ பாடத்திட்டங்களை கொண்டு வர வேண்டும். சாதிமறுப்பு செய்யும் பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அவற்றையும் இந்த சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மரண தண்டனை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,
பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் எண்ணுபவர் தான் நம் முதலமைச்சர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கனவிலே கூட எண்ணிப் பார்க்காத அளவிற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில்,
இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஜி.கே.மணி (பாமக) கூறுகையில்,
இந்த சட்டம் தேவையான சட்டம். மரண தண்டனையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தவறான புகாரின் அடிப்படையிலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றார்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.
இதன்பிறகு முதலமைச்சர் கொண்டு வந்த சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.