அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரம்: அ.தி.மு.க.வினர் சாலை மறியல்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு
- அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பா.ஜ.க.வினர் 417 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, கே.பி.கந்தன், அசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஜெயக்குமார் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
உடனே அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைபோல மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பா.ஜ.க.வினர் 417 பேர் மீதும் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.