தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழலை கண்டித்து 17-ந்தேதி போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு

Published On 2025-03-14 08:39 IST   |   Update On 2025-03-14 08:39:00 IST
  • முதல்​வர் பதவி​யில் தொடர தனக்கு தார்​மீக உரிமை இருக்​கிறதா என்​றும் அவர் தன்னைத் தானே கேட்​டுக்​கொள்ள வேண்டும்.
  • டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடை​பெற்​றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்​தையே உலுக்​கி​யுள்​ளது.

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி முறைகேட்டை கண்டித்து மார்ச் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மதுபான விநியோக நிறுவனங்களில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருகிறார். தற்போது கணக்கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்சமாகப் பெறப்பட்டதாக, மதுபான ஆலைகளில் இருந்து தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உள்ளது.

மேலும், முதல்வர் பதவியில் தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

தி.மு.க.வினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

தி.மு.க.வின் இந்த மெகா ஊழலை கண்டித்து மார்ச் 17-ந் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை தாளமுத்து நடராசன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.

எல்லோரும் 17-ந்தேதி போராட்டத்தில் பங்கு பெற வேண்டும். பெரிய புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை கோரப்பிடியில் இருந்து வெளியே கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News