மத்திய மந்திரி எல்.முருகனின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது- டி.ஜி.பி.க்கு அண்ணாமலை கடிதம்
- உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதில் அளித்தது மேலும் வருத்தமளிக்கிறது.
- மத்திய மந்திரியையும் இப்படிக் கேவலப்படுத்தினால், நம் மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நிலை என்ன?
சென்னை:
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்குள்ள முருகன் கோவிலுக்கு இந்து அமைப்பினர் செல்வதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற மத்திய மந்திரி எல்.முருகனை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது எல்.முருகன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் பிறகு அவரை கோவிலுக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதித்தார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந்தேதி அன்று மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த மத்திய மந்திரி எல்.முருகனின் பாதுகாப்பை தமிழக போலீசார் தவறாகக் கையாண்டு வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை தமிழக பா.ஜ.க. சார்பில் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
மத்திய மந்திரி எல்.முருகன் சுப்பிரமணிய சுவாமி கோவில், காசி விஸ்வநாதர் மலைக்கோவில் ஆகிய இரு தலங்களுக்கும் வருகை தரும் பயணத் திட்டத்திற்கு தமிழக போலீசாரிடம் முன் அனுமதி பெற்றிருந்தும், கோவிலின் நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள கோவில்களுக்கு உடனடியாக செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்து மத்திய மந்திரி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவரை கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதில் அளித்தது மேலும் வருத்தமளிக்கிறது.
இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஒரு கட்டத்தில் அவர் விரும்பிய இடத்தில் வழிபடும் உரிமையைப் பறிக்கும் வகையில் போலீசாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அப்பட்டமாகப் பயன்படுத்தியதே ஆகும்.
தமிழகத்தில் சமீபகாலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நடக்கும் குற்றச்செயல்களால் ஏற்கனவே பீதியில் இருக்கும் பொதுமக்களிடையே இது கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும், மத்திய மந்திரியையும் இப்படிக் கேவலப்படுத்தினால், நம் மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நிலை என்ன?
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.