கூட்டணியை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- அரசியல் ஆட்டத்தில் முன்னேறுகிறார்
- மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தார்.
- கூட்டத்தில் 45 கட்சிகள் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் பட்டியலிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.
தமிழ்நாட்டுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டமாக புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை மிக கடுமையாக எதிர்த்தார்.
அது மட்டுமின்றி மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள கல்வி நிதி ரூ.2,152 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் நீடிக்கும். மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தார். அதுமட்டு மின்றி இந்தி திணிப்பை கட்டாயமாக எதிர்ப்போம் என்றும் அறிவித்து உள்ளார்.
இந்த பிரச்சனை பரபரப்பாக உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் பல பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.
இது மட்டுமின்றி 2026-ல் எம்.பி. தொகுதிகள் மறு சீரமைப்பு குறித்து ஏற்படும் இழப்புகள் பற்றி விவாதிக்க மார்ச் 5-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் 45 கட்சிகள் பங்கேற்பதற்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதம் தி.மு.க. கூட்டணி கட்சிகளை மேலும் கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைக்கும் என்பதோடு தென்னிந்திய அரசியலிலும், இந்திய அரசியல் களத்திலும் இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதாகவே பார்க்கப்படுகிறது.
மாநில நலன் என்று வரும்போது அ.தி.மு.க., பா.ம.க. முதலான கட்சிகள் கூட இதை எதிர்க்க முடியாது என்பதால் இதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோவையில் பேசும்போது தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பாராளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படாது என்று உறுதி அளித்து பேசியிருந்தாலும், அதற்கும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பல்வேறு விளக்கங்களை கேட்டு பேட்டி அளித்தார்.
விகிதாசார அடிப்படை என்பது இப்போதுள்ள தொகுதிகள் அடிப்படையில் கணக்கிடப்படுமா? அல்லது மக்கள் தொகை அடிப்படையில் இருக்குமா? என்று கேட்டார். இதற்கு உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இருந்து தெளிவான பதில் இல்லை.
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏதாவது கட்சிகள் விலகுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கும் எதிர்க்கட்சிகள் மத்தியில் அரசியல் சதுரங்க காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட நகர்த்தி வருகிறார்.
இதன் அச்சாரமாக காஞ்சிபுரத்தில் ஏற்கனவே கூட்டணி கட்சிகள், தோழமை கட்சிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து பொதுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது தனது பிறந்த நாளையொட்டி சென்னை கொட்டிவாக்கத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு இன்று சிறப்புரையாற்ற உள்ளார்.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணியாக வலுவான கூட்டணியாக அமைவதற்கு வழிவகுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.