தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பா.ஜ.க. வலியுறுத்தல்
- அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
- சட்ட விரோத மணல் கொள்ளைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க தவறிய, மாநிலம் முழுக்க மணல் கொள்ளையர்களுக்கு உடந்தையாக நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அரசு நிர்வாகத்தினரும் செயல்பட்டு தமிழகத்தின் மண்வளம் சுரண்டப்படுவதால், நிர்வாக சீர்கேட்டிற்கு முழு காரணமாக விளங்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு உரிய மதிப்பளித்து, தமிழக அரசு தானாக முன்வந்து மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து, தனது ஆட்சியில் தன் கண்ணெதிரே நடக்கும் மணல் கொள்ளையை உடனடியாக தடுக்க முற்பட வேண்டும்.
தமிழக விவசாயிகளின் நலத்தை பேணிக்காக்கும் வகையில், நிலத்தடி நீர் ஆதாரத்தை முழுமையாக பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் சட்ட விரோத மணல் கொள்ளைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க முனைந்து படுகொலை செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.