வெறுப்பை உமிழ்கிறார் கவர்னர்- அமைச்சர் ரகுபதி
- தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி அனைத்துமே இருமொழிக்கொள்கையால் சாதித்தவை.
- ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக்கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மும்மொழி கொள்கையும் மூக்கறுப்பட்டு நிற்க போகிறது என்று அமைச்சர் ரகுபதி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழகம் பொருளாதாரத்திலும், கல்வியிலும் பெற்றுள்ள வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார் கவர்னர். தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி அனைத்துமே இருமொழிக்கொள்கையால் சாதித்தவை.
தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து உள்ளே நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?
சனாதனம், சமஸ்கிருதத்தை காலூன்ற செய்திட குட்டிக்கரணம் போடும் கவர்னரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது என்று கூறியுள்ளார்.