கலெக்டர், எஸ்.பி. நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் - தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் அடாவடி
- கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
- எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார்
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மீது உள்ள அதிருப்தியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வனை தி.மு.க. தலைமை கழகம் நியமித்தது.
இந்த நிலையில் தர்மசெல்வனை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்த 2 நாளில் அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது முடிவதற்குள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வந்த தர்மசெல்வன் தலைவரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது அண்ணா சிலை அருகே அவரின் ஆதரவாளர்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தர்மசெல்வன் பேசியபோது கலெக்டர், எஸ்.பி என்னுடைய பேச்சை தான் கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்களையும் மாற்றி விடுவேன்.
எனக்கு கட்சியின் தலைவர் அதிகாரத்தை வழங்கி உள்ளார் என பேசிய ஆடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.