தமிழ்நாடு

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் பலகை உடைந்து விசைப்படகு மூழ்கியது- 7 மீனவர்கள் மீட்பு

Published On 2025-02-09 12:34 IST   |   Update On 2025-02-09 12:34:00 IST
  • படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது.
  • அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர்.

மண்டபம்:

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜோசலன் என்பவருக்கு சொந்தமான படகில் 7 மீனவர்கள் சென்றிருந்தனர்.

அவர்கள் நள்ளிரவில் தனுஷ்கோடி அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இந்தநிலையில் அவர்களது படகில் திடீரென்று பலகை உடைந்து விசைப்படகிற்குள் தண்ணீர் புகுந்தது. அதனை தற்காலிகமாக சரி செய்யும் முயற்சியில் படகில் இருந்த மீனவர்கள் மேற்கொண்டனர்.

ஆனாலும் அவர்களது முயற்சி வீணானது. தொடர்ந்து படகிற்குள் தண்ணீர் அதிகம் புகுந்ததால் பாரம் தாங்காமல் சிறிது சிறிதாக விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடலில் குதித்தனர்.

இதற்கிடையே அவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்டவைகளுடன் படகு முழுவதுமாக மூழ்கியது. இதனால் செய்வதறியாது தவித்த மீனவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து கடலில் பல மணி நேரம் நீந்தியவாறு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு விசைப்படகை சேர்ந்தவர்கள் பார்த்து உடனடியாக தங்கள் படகை திருப்பினர். நடுக்கடலில் தத்தளித்த 7 பேரையும் தங்கள் படகில் ஏற்றி இன்று அதிகாலை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

Tags:    

Similar News