தமிழ்நாடு
பாரதியார் நினைவு இல்லம் சீரமைக்கப்படுகிறது - சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்

பாரதியார் நினைவு இல்லம் சீரமைக்கப்படுகிறது - சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்

Published On 2025-03-26 10:08 IST   |   Update On 2025-03-26 10:08:00 IST
  • இல்லத்தை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.
  • நினைவிடத்தை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

எட்டயபுரம்:

மகாகவி பாரதியாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவரது இல்லம் அமைந்துள்ளது.

அவரை போற்றும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவு இல்லமாக மாற்றினார்.

எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள அவரது நினைவு இல்லம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பகுதி நேர நூலகமும் இயங்கி வருகிறது.

மகாதேவி என்பவர் இல்லத்தின் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த இல்லத்தை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை பார்வையாளர் நேரம் முடிந்த உடன் இல்லத்தின் காப்பாளர் கதவுகளை மூடினார். அப்போது பாரதியார் இல்லத்தின் முன்பு மேல்மாடியின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ்தளத்தின் மேற்கூரையும் இடிந்து அதில் இருந்து கற்கள் விழுந்தன.

இந்நிலையில் பாரதியார் நினைவு இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைப்பு செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எட்டயபுரத்தில் அமைந்துள்ள நூறாண்டு பழமையான பாரதியார் பிறந்த இல்லத்தின் மேல் தளம் மழையால் பாதிக்கப்பட்டு நேற்று மாலை விழுந்துவிட்டது. இந்த நினைவிடத்தை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழக நிதி அமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாரதியார் பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

பொதுப்பணிதுறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் பாரதியார் பிறந்த இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விரைவில் மறுசீரமைக்கப்படும். அதுவரை சுற்றுலா பயணிகள் யாரும் பாரதியார் பிறந்த இல்லத்தை பார்வையிட வர வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News