கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமான பா.ஜ.க. நிர்வாகி காருக்குள் பிணமாக மீட்பு- போலீசார் விசாரணை
- கூடல்புதூர் போலீசார், காரின் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் படுத்த நிலையில் கருப்பசாமி பிணமாக கிடந்தார்.
- பிணமாக கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரையை அடுத்த எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). இவர் செல்லூர் மண்டல பா.ஜ.க. ஓ.பி.சி. அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கட்சி பணியில் சமீப காலமாக தீவிரம் காட்டி வந்த அவர் தனி அணி சார்பில் பல்வேறு கூட்டங்களையும் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் கருப்பசாமியை உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடினர். அத்துடன் பா.ஜ.க. நிர்வாகளிடமும் விசாரித்தனர்.
ஆனாலும் கருப்பசாமி குறித்த எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கருப்பசாமி மாயமான குறித்து அவரது குடும்பத்தினர், கூடல்புதூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கருப்பசாமியை தேடினர். மேலும் அவரது கார் சென்றுவந்த பாதைகள் குறித்து டோல்கேட் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை கூடல்புதூர் பகுதியில் தனியாக கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோது உள்ளே ஒருவர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த கூடல்புதூர் போலீசார், காரின் கண்ணாடிகளை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, காருக்குள் படுத்த நிலையில் கருப்பசாமி பிணமாக கிடந்தார். அவரது உடல் பாகங்கள் லேசாக அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிணமாக கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது காரில் அமர்ந்திருந்தபோது மாரடைப்பு வந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.