null
தொடரும் படுகொலைகள்: துருப்பிடித்து போன இரும்புக்கரம் - சட்டம் ஒழுங்கை சரி செய்வாரா முதலமைச்சர்?
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.