தமிழ்நாடு

ஆண்டுக்கு 15 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே பெற முடியும்- ஆயில் நிறுவனம் குறுந்தகவல்

Published On 2025-03-19 11:45 IST   |   Update On 2025-03-19 11:45:00 IST
  • அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
  • சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆண்டுக்கு 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் போது 'அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள்' என்று ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

இதனால் ஒரு ஆண்டுக்கு 15 கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை விளக்கி கியாஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுத்தால் கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவதால் பலர் பாதிக்கப்படலாம்.

எனவே ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும் போதும் அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News