கோவை, திருப்பூரில் இன்று முதல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: வர்த்தகம் பாதிப்பு
- விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
- 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
நீலாம்பூர்:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.
கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.
அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-
விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.
எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.