உள்ளூர் செய்திகள்

நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை: தம்பதிக்கு வலைவீச்சு- உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Published On 2025-03-19 10:28 IST   |   Update On 2025-03-19 11:00:00 IST
  • இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.
  • உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற இவர், நெல்லை டவுன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி நேற்று அதிகாலையில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது காட்சி மண்டபம் அருகே வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சம்பவஇடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, ஜாகீர்உசேன் பிஜிலி உடலை கைப்பற்றி விசாரணை நடததினர். இதில், ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தவுபிக்(34) என்பவருக்கும் இடையே தொட்டிப்பாலம் தெரு பகுதியில் பிரதான சாலையில் உள்ள ஒரு இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது தெரிய வந்தது.

மேலும் இடப்பிரச்சினை காரணமாக, கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து ஜாகீர் உசேனை கொலை செய்தததும் தெரிய வந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் கார்த்திக், கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருன்னிஷாவின் சகோதரர் அக்பர்ஷா ஆகியோர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தி, நூருன்னிஷா, கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இந்த கொலையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நூருன்னிஷா ஆகியோரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன், அருணாச்சாலம் உள்ளிட்டோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தலைமறைவான தம்பதியை பிடிக்க மதுரை, தென்காசி, நெல்லையின் புறநகர் பகுதிகளில் தனித்தனி குழுவாக பிரிந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாகீர் உசேன் பிஜிலியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டணி என்ற அமைப்பினை ஏற்படுத்தி மற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலினை ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

Tags:    

Similar News