பாராளுமன்றத்தில் பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
- லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
- பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து விவாதிக்க விஜய் வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வேலையின்மை காரணமாக லட்சகணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என, இதன் பாதிப்புக்கு உள்ளாகி திணறும் மக்கள் ஏராளம்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வேலையின்மை மிக அதிகமாக ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஏற்ற தாழ்வை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
மேலும் படித்து பட்டம் பெறும் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி திணறி வருகின்றனர். மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முன்வரவில்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள இளைஞர்கள் வேலையின்றி அலைவது இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாதது பல சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வண்ணம் அவர்களது திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும் தொழில் முனைவோர்களையும் ஊக்கபடுத்தி அவர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டியது கட்டாயம்.
நாட்டில் இன்று நிலவி வரும் இந்த மிக முக்கியமான மக்கள் பிரச்சனையை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.