தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதியோர்களுக்கு தனி நலப்பிரிவு- மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2025-03-19 11:00 IST   |   Update On 2025-03-19 11:00:00 IST
  • நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
  • ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை:

சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு, நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியாகி உள்ள அறிவிப்புகளில் சில... 

* சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த திட்டம். இதற்காக மின்னணு பலகைகள் வாங்க ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.

* சென்னையில் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி நோய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.

* மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்.

* சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.

* சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வினாடி வினாப் போட்டிகள் நடத்திட பள்ளிகளில் குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

* 81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000-முதல் ரூபாய் 1,50,000 வரை வழங்குதல்.

* சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

* பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/ என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.

* 29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப்பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

* 26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ,கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

* 50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப்பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

* மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.

* முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன் மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.

Tags:    

Similar News