பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது- அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
- வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.
- இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவு காணும் வகையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருந்தார். இந்த குழுவினர் ஏற்கனவே அரசு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.
ஆனாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும், சரண்டர் விடுப்பை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த ஆலோசித்து உள்ளனர். இதில் குறிப்பிட்ட சில சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு இப்போது எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் நாளை (இன்று) எடுக்க கூடாது என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒவ்வொரு துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் (19-ந்தேதி) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
இது சம்பந்தமாக மேற்கோள் காட்டப்பட்டு உள்ள குறிப்பில், அரசு முன் வைத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு உங்கள் கவனத்தை செலுத்தி வேலை நிறுத்த அச்சுறுத்தல் அல்லது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அல்லது வேறு எந்த வகையான போராட்டங்களிலும் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும். விதிகளை மீறுவதாகும்.
எனவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதிகளை மீறி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உங்கள் துறையின் அரசு பணியாளர்களின் வருகையை இன்று கவனமாக பதிவிட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சேவை சங்கங்களால் நடத்தப்படும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதின் விளைவாக அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருதப்பட வேண்டும்.
பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் பெறுவோர் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் இந்த 'ஸ்டிரைக்'கில் பங்கேற்றாலும் அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதியை எந்த அரசு ஊழியரும் மீறுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விதிகள் 1973-ன்படி ஊழியர்களால் அங்கீகரிக்கப்படாமல், பணியில் இல்லாமல் இருந்தால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வேலை நிறுத்த நாளில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.
எனவே இன்று யாரேனும் பணிக்கு வராமல் விதிகளை மீறி இருந்தால் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பணிபுரியும் ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை காலை 10.15 மணிக்குள் எடுத்து இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.