தமிழ்நாடு

பழைய வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர வியாழக்கிழமை தோறும் விசாரணை- ஐகோர்ட் அதிரடி நடவடிக்கை

Published On 2025-03-19 08:05 IST   |   Update On 2025-03-19 08:05:00 IST
  • தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
  • சென்னை ஐகோர்ட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை:

சுப்ரீம் கோர்ட் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் வரை ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட சதவீத வழக்குகளை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரும்போது, அதைவிட பெருமளவு புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விடுவதால், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இதனால், மாற்றுமுறையில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர சுப்ரீம் கோர்ட்டும், அனைத்து மாநில ஐகோர்ட்டுகளும் நடவடிக்கை எடுத்தன.

இதற்காக தேசிய அளவில் ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. அதுபோல ஐகோர்ட் சார்பில் அவ்வப்போது லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரவில்லை.

சென்னை ஐகோர்ட்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான பலதரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, வாரந்தோறும் வியாழக்கிழமை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, ஜூடிசியல் பதிவாளர் கே.சீதாராமன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அதில், ''20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் அனைத்து வகையான வழக்குகளும், அந்ததந்த நீதிபதிகள் முன்பு வாரந்தோறும் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

இந்த நடைமுறை சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று வக்கீல்கள், வழக்குகளை நேரடியாக தொடரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்துகிறோம்'' என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News