செங்கல்பட்டு அருகே விபத்து- கார்கள் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி
- விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
- விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
சென்னை நெற்குன்றம், அழகம்மாள் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கணபதி(வயது35). இவர் தனது மனைவி சரண்யா, மகள் ரியா மற்றும் உறவினர்கள் ஜெயா அவரது மகள் ஹேமா(13) மகன் பாலா(10), ஆகியோருடன் திண்டுக்கல் நோக்கி நேற்று இரவு காரில் புறப்பட்டனர். அவர்கள் வத்தலகுண்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. காரை கணபதி ஓட்டினார்.
நள்ளிரவு செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது லேசாக மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி எதிரே சென்னை நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கணபதி குடும்பத்தினர் வந்த கார் சாலையை விட்டு இறங்கி அருகில் உள்ள முட்புதரில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த கணபதி, சிறுவன் பாலா, சிறுமி ஹேமோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெயா, சரண்யா, 1 1/2 வயது குழந்தை ரியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
விபத்து பற்றி அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்த பலியான கணபதி உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஜெயா உள்பட 3 பேரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழை பெய்து கொண்டு இருந்த போது அதிவேகத்தில் கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.