சீமான் மீது நடவடிக்கை கூறிய வழக்கு - ஆவணங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவு
- வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்பு சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.