தமிழ்நாடு

234 தொகுதிகளில் தி.மு.க. நடத்திய ரகசிய ஆய்வு - சாதகமான பதில் வந்ததால் உற்சாகம்

Published On 2025-03-21 14:38 IST   |   Update On 2025-03-21 14:38:00 IST
  • சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது.
  • உள்கட்சியில் நிலவும் பூசல்தான் காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது.

சென்னை:

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. இந்த இலக்குடன் தேர்தல் பணிகளை தி.மு.க. மேலிடம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தி.மு.க. சார்பில் 234 தொகுதிகளிலும் ரகசிய ஆய்வு நடந்ததாக தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று மூலம் இந்த ஆய்வு நடந்துள்ளது.

மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகள் எப்படி உள்ளது? ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள செல்வாக்கான நபர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.

ஆய்வு முடிவில் சுமார் 50 தொகுதிகளில் தி.மு.க. 100 சதவீதம் வெல்லும் வாய்ப்புடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

என்றாலும் சில தொகுதிகளில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்திருக்கிறது. உள்கட்சியில் நிலவும் பூசல்தான் அதற்கு காரணம் என்று ஆய்வில் தெளிவாகிறது. இதையடுத்து அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தி.மு.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதே போன்ற ஒரு கருத்து கணிப்பை அ.தி.மு.க.வும் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதில் எத்தகைய முடிவுகள் கிடைத்து இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை.

Tags:    

Similar News