தமிழ்நாடு

மாணவி விவகாரத்தில் மலிவான அரசியல் வேண்டாம்! - குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனையை அரசு உறுதி செய்யும்! - முதலமைச்சர்

Published On 2025-01-08 11:55 IST   |   Update On 2025-01-08 11:55:00 IST
  • FIR கசிந்ததற்கு மத்திய அரசு நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.
  • மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.

சென்னை:

தமிழக சட்டசபையின் 3-ம் நாள் நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

உண்மையான அக்கரையோடு சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அவையில் ஒருவர் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக பேசினார்.

சென்னையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம். பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று நியாயம் பெற்று தருவதே அரசின் நோக்கம்.

குற்றம் நடந்தபின் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்படாமல் இருந்தால் நீங்கள் எங்களை குறை சொல்லலாம். குற்றம் நடந்தது அறிந்த உடனேயே காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு அடுத்த நாளே குற்றவாளி கைது.

FIR கசிந்ததற்கு மத்திய அரசு நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கேமரா இல்லை, பாதுகாப்பு இல்லை என பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுவது நியாயமில்லை.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.

முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து யார் அந்த சார் என கேட்கிறீர்கள். யார் அந்த சார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவிடம் கொடுங்கள்.

மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம் தான்.

மாணவி விவகாரத்தில் மலிவான அரசியலை செய்ய வேண்டாம் என்றார். 

Tags:    

Similar News