தமிழ்நாடு

காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-01-21 12:43 IST   |   Update On 2025-01-21 12:43:00 IST
  • பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்
  • அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காரைக்குடி:

தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கவும், அதற்காக அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டார்.

அதன்படி தனது முதலாவது கள ஆய்வை கடந்த ஆண்டு நவம்பவர் கோவையில் தொடங்கினார். இதையடுத்து விருதுநகர், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்ததோடு, சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.

அந்த வகையில் தொடர்ச்சியாக கள ஆய்வு பணியை சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் மேற்கொள்கிறார். அதன்படி 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். அங்கு அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், கே.என்.நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு 11.30 மணிக்கு வந்தார். முன்னதாக சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல் காரைக்குடி மாநகரம் சார்பில் கல்லூரி சாலை ராஜீவ்காந்தி சிலை அருகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.



இதையடுத்து அவர் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள வளாகத்தில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தாரால் ரூ.12 கோடி நிதியில் 30,450 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News