கள் இறக்கி போராட்டம் நடத்திய விவசாயிகள்- கள் குடித்து ஆதரவு தெரிவித்த சீமான்
- பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.
- மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.
தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.
கள் இறக்கி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மேடையில் கள் அருந்தி ஆதரவு தெரிவித்தார்.
பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கிறது. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், நுங்கு, பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி ஆகியவை கிடைக்கிறது.
மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம். ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 38 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.