கோவை: சங்கனூர் ஓடை அருகே இடிந்து விழுந்த 3 வீடுகளுக்கு பதில் மாற்று வீடு
- நீர் ஓடையை தூர்வாரும் பணி மேற்கொள்ள இருப்பதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
- சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தது.
கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடு இருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்பட்டது. பின்புற வீட்டை அகற்றியதால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது. அவ்வப்போது அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு சிறிது நேரத்தில் சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தது. இதனையடுத்து அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக 2 மாடி வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டிற்குள் இருந்த டி.வி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது.
இந்நிலையில், வீடு இழந்த 3 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று வீடு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.