வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மேல் விசாரணை- ராஜேந்திர பாலாஜி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
- முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
- விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, ரூ.70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்தேன். அதில் மேல் விசாரணை நடத்த கேட்டுக்கொண்டேன்.
கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவிடம் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அதனை பரிசீலித்து, மேல் விசாரணை நடத்தி, விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 4 வாரங்களில் பதிலளிக்கும் படி, ராஜேந்திர பாலாஜிக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.