அண்ணா பல்கலை மாணவி வழக்கு- ஞானசேகரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
- யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
- கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது.
யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிறையில் இருந்த ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு அனுமதி கேட்டனர். கோர்ட்டு 7 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து நேற்று ஞானசேகரனை சிறையில் இருந்து அழைத்து வந்த போலீசார் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
அப்போது சில தகவல்களை ஞானசேகரனிடம் இருந்து போலீசார் திரட்டியுள்ளனர். ரகசியமாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.