தமிழ்நாடு

மூணாறு சாலை விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2025-02-21 13:06 IST   |   Update On 2025-02-21 13:06:00 IST
  • துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
  • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை கிழக்கு கிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் பயின்றுவரும் 39 மாணவர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் கேரளா மாநிலத்திற்கு பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்ற நிலையில் கடந்த 19.2.2025 அன்று மூணாறு பகுதியில் பேருந்து எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்குளம் வட்டம், திங்கள் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆத்திகா (வயது 20), அகஸ்தீஸ்வரம் வட்டம், கனகபுரம், அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த வேணிகா (20) ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருவரங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சுதன் நித்யானந்தன் (20) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில், காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவன் செல்வன் கெவின் எட்மர் இட்சோன் சுரேஷ் (வயது 20) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News