அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும்.
- அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் வழக்கு போடப்பட்டது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையின் 3-ம் நாள் நிகழ்வில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய உறுப்பினர்கள், பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் கவர்னர் செயலில் சந்தேகம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
இதனிடையே இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் காவல்துறை அனுமதி பெற்ற பின்னர் தான் போராட்டம் நடத்த வேண்டும். அது காவல்துறையின் கட்டுப்பாடு. போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் வழக்கு போடப்பட்டது.
கவர்னரை கண்டித்து திமுக நடத்திய போராட்டத்திற்கு அனுமதி பெற்ற பின்னர் தான் நடத்தப்பட்டது. ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை என்றார்.