தமிழ்நாடு

தொகுதி மறுசீரமைப்பு- அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிற கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவாக உரை

Published On 2025-03-05 11:41 IST   |   Update On 2025-03-05 12:24:00 IST
  • மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது.
  • மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

இதைதொடர்ந்து, முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய பிற கட்சிகள் கூட்டுக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அப்போது, " பிற மாநில மக்கள் தொகையுடன் தமிழக மக்கள் தொகையை ஒப்பிட்டு புள்ளி விவரங்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

மேலும் அவர், " மக்கள்தொகை குறைவாக உள்ளதால் தொகுதி மறுவரையறையில் தமிழகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் எந்த முடிவையும் ஏற்போம்" என்றார்.

பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் எதிர்க்க வேண்டும்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனியாக போராடினால் தீர்வு கிடைக்காது. பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டும்" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், " தொகுதி மறுவரையறை செய்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பு தரப்பட வேண்டும்" என்றார்.

தொகுதி மறுவரையறை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, " தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான சக்தியாக நாம் உருவாக வேண்டும். தொகுதி அரசியல் அமைப்பு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்க வேண்டும்.

ஒத்த கருத்து கொண்டவர்களை நாம் ஒன்றிணைத்து மாநிலங்களின் உரிமைக்காக போராடி வேண்டியது அவசியம். பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பான்மையாக உள்ளதால் மறுவரையறையை சர்வாதிகாரத்துடன் செயல்படுத்த நினைக்கின்றனர்" என்றார்.

Tags:    

Similar News