தமிழ்நாட்டில் பகல்நேர வெப்பநிலை அதிகரிக்கும்- சென்னை வானிலை மையம்
- பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
- கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இன்னும் குளிர்காலம் போல கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
சில இடங்களில் காலை நேரங்களிலும் குளிர்ச்சி யான கால நிலை உள்ளது. அதேநேரம், விரைவில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் மாநிலத் தின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலம் வரும் போது அதிகப்பட்ச வெப்ப நிலை சீராக உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் துணை இயக்குனர் ராஜ் கூறுகையில், நகரின் மையப்பகுதிகளில் வடகிழக்கு காற்று கூறுகள் இல்லாதது மற்றும் நகர்ப்புற வெப்பத்தின் தாக்கம் ஆகியவை கடந்த 6 ஆண்டுகளில் இயல்பான அல்லது குறைந்த வெப்பநிலைக்கு பங்களித்த காரணங்களாக உள்ளது என்றார்.
2011 மற்றும் 2014-க்கு இடையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இரவு நேர வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இரவு வெப்பநிலை சாதாரணமாக 20 டிகிரி செல்சியசுக்கு மேல் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.