விருதுநகர் பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
- வீரலெட்சுமி, கஸ்தூரி, மாணிக்கம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சின்னவாடியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறைகள் தரை மட்டமாகின.
பணியில் இருந்த பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் உடல் கருகின. இதில் ராமலெட்சுமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சைமன் டேனியல், வீரலெட்சுமி (35), கஸ்தூரி, மாணிக்கம், முருகேஸ்வரி ஆகியோர் ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சைமன் டேனியல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த நிலையில் வீரலெட்சுமி, கஸ்தூரி, மாணிக்கம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வீர லெட்சுமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.