தமிழ்நாடு

வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அபராதம் விதிக்க முடிவு

Published On 2025-03-18 11:29 IST   |   Update On 2025-03-18 11:30:00 IST
  • வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
  • காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதில், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.

நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கிடையே கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை.

காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் அபராதம் குறித்து தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News