உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- கடைசி சுற்றில் குகேஷ், சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷ்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற நம் சொந்த கிராண்ட்மாஸ்டர் டிகுகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
SDAT இன் ELITE பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரது வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் கவனிக்க வைக்கிறது.
இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையைக் கண்டது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது.
பிரகாசிக்கவும், சாம்பியன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.