கோவில்- மசூதி தொடர்பாக வழக்கு.. உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு ப.சிதம்பரம் வரவேற்பு
- வழிபாடு தலங்களின் தன்மை 15-8-1947 ஆம் நாளில் எப்படி இருந்ததோ, அதே தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
- இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் இது தொடர்பான மேலும் வழக்கு ஏதும் தொடர முடியாது.
இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அன்று எப்படி இருந்ததோ, அதே போல தான் இனிமேலும் இருக்க வேண்டும். அதில் எவ்வித மாற்றம் செய்யக் கூடாது என்ற வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991-ஐ எதிர்த்து சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் "வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991-ன் அரசியலமைப்பை எதிர்த்து பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரணை நடைபெற்று, முடியும் வரை கோவில்-மசூதி தொடர்பான எந்த வழக்கும் தொடர முடியாது" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் "இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் இது தொடர்பான மேலும் வழக்கு ஏதும் தொடர முடியாது. தற்போது வரை தொடரப்பட்ட வழக்குகளில் முக்கியமான உத்தரவு அல்லது இறுதி உத்தரவு நீதிமன்றங்களால் பிறப்பிக்கக்கூடாது" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஆதரித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வழிபாடு தலங்களின் தன்மை 15-8-1947 ஆம் நாளில் எப்படி இருந்ததோ, அதே தன்மை என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை நிலை நிறுத்தும் முயற்சியை எல்லோரும் வரவேற்க வேண்டும். இந்தச் சட்டம் உயரிய நோக்கத்துடன் 1991 ல் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை விரைவில் விசாரித்துத் தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு" என்று பதிவிட்டுள்ளார்.