சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் திரண்ட பக்தர்கள் கூட்டம்
- வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர்.
- மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவா சையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மார்கழி மாத பிரதோஷம் (இன்று) மற்றும் அமாவாசையை (30-ந்தேதி) முன்னிட்டு இன்று முதல் வருகிற 31-ந்தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரதோஷங்களில் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அதன்படி இந்த வருடத்தில் இறுதியில் அமைந்துள்ள சனி பிரதோஷமான இன்று சதுரகிரிக்கு செல்ல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப்பாறையில் திரண்டனர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது.
வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை மலையேறி சென்று சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் பகுதியில் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணி வரை திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்துள்ளனர்.
நாளை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.