தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு: செங்கோட்டையன் சமரசம் ஆவாரா?

Published On 2025-02-11 11:06 IST   |   Update On 2025-02-11 11:06:00 IST
  • செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
  • செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தொடர் கதையாகிவிட்டன.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சாராரிடம் ஏற்பட்டுள்ளது.

இதில் முதன்மையாக இருப்பவர் செங்கோட்டையன். அவருடன் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், சி.வி.சண்முகம் உள்பட 6 மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அப்படியானால்தான் கட்சி பலமாக இருக்கும்.

தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரில் வற்புறுத்தினார்கள். அவர்களது கருத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கட்சி நிழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அவர்களுடைய செயல்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி கண்காணித்து வருகிறார்.

செங்கோட்டையனை ஓரம் கட்டுவதில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான விரிசல் அதிகரிக்கத் தொடங்கியது. எந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைப்பதும் இல்லை.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் கோவை அருகே எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்க வில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பொறாததால் கலந்து கொள்ளவில்லை என்று பூசி மொழுகினார்.

ஆனால் அது கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். இதன்மூலம் செங்கோட்டையன் புறக்கணித்தது உறுதியானது.

அது மட்டுமல்ல நேற்று சென்னை தலைமை கழகத்தில் காணொலி மூலம் டெல்லி அலுவலகம் திறக்கப்பட்ட நிகழ்ச்சியிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

இதுபற்றி அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது அழைப்பிதழ் வழங்கப்பட வில்லை என்றார்கள். இருவரும் சமரசம் ஆவார்களா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் கூறியதாவது:-

செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர். மூத்த நிர்வாகி. அவருக்கு உரிய மரியாதையை கட்சி மேலிடம் வழங்கவில்லை. அதற்கு மாறாக அவரை மட்டம் தட்டும் வேலைகளையே செய்கிறார்கள்.

செங்கோட்டையனின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதுபற்றி அவரிடம் கலந்து பேசவில்லை.

அது மட்டுமல்ல. அவர்களில் 2 பேர் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டவர்கள்.

கட்சி நல்லா இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். அவர் எந்த முடிவெடுத்தாலும் கட்சி நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்றார்கள்.

தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் இப்படி கட்சிக்குள் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து இருவரும் சமரசம் ஆகி கட்சியை பலப்படுத்தவும், கட்சியை வழி நடத்தவும் முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறும்போது, 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் தயாராகி கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் கட்சிகளுக்குள் ஏற்படும் குழப்பங்களுக்கு திரை மறைவு காரணங்கள் பல இருக்கும் என்றார்கள்.

Tags:    

Similar News