72-வது பிறந்தநாள் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து
- தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
- பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் குடும்பத்தார் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
அப்போது மகன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு வந்திருந்த மூத்த அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கினார்.
அப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மு.பெ.சாமிநாதன், கணேசன், ஆவடி நாசர், வாரிய தலைவர் ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், விருகம்பாக்கம் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தமிழச்சி தங்கபாண்டின், புழல் நாராயணன், சேப்பாக்கம் மதன்மோகன், சென்னை மேயர் பிரியா, படப்பை மனோகரன், கலாநிதி வீராசாமி, கலைஞரின் உதவியாளர் நித்யா, பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு. ரஞ்சன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் உதயசூரியன் வடிவில் வண்ண வண்ண பூக்கள் அலங்காரத்துடன் மக்கள் முதலமைச்சரின் மனித நேய நாள் என்று வாசகம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் பிறகு பெரியார் திடலுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அங்கிருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு சென்று கருணாநிதி படத்திற்கு மலர் தூவி வணங்கினார். அங்கு ராஜாத்தி அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி உடன் இருந்தார்.
அதன் பிறகு 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்றனர்.
அதன் பிறகு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் பிரமாண்ட 'கேக்' கொண்டு வரப்பட்டது. அப்போது தலைமை கழக முன்னணி நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டினார்.
அதை பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வழங்கினார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
அதன் பிறகு கலைஞர் அரங்கம் சென்றார். அங்கு கூடி இருந்த தொண்டர்கள் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் விண்ணதிர பிறந்தநாள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.
அப்போது அங்கு வந்திருந்த அமைச்சர்கள், தொண்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசித்தார். அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
* தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.
* தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்.
* தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இதுதான் ஒரே இலக்கு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாலைகள், புத்தகங்கள், வீரவாள்கள், பழங்கள், பூக்கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.