ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான் - தமிழிசை
- பாஜகவும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது
- யாரும் நம்பிக்கையோடு போட்டி போடக்கூட தகுதியற்றது திமுக
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் அந்த தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
கடந்த 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
தி.மு.க. கூட்டணியில் தனது கைவசம் இருந்த இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பாததால் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து மூத்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், பாஜகவும்... ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது... அனைத்து முக்கிய கட்சிகளும்.. இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்பது செய்தி... புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல... உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான்...
யாரும் நம்பிக்கையோடு... போட்டி போடக்கூட தகுதியற்றது திமுக... என்பதை அனைத்துக் கட்சிகளின் முடிவும் காண்பிக்கிறது... திமுகவின் அராஜக அரசியலால் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இன்மையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும் திமுகவை 2026- இல் மக்கள் புறக்கணிப்பார்கள்...." என்று பதிவிட்டுள்ளார்.