எங்கள் கருத்தியலை அண்ணன் சீமான் பேச ஆரம்பித்திருக்கிறார் - தமிழிசை
- பாஜகவுக்கு யாரவது ஆதரவாக பேசினால் அவரை பி டீம் சி டீம் என்று சொல்லி விடுகிறார்கள்.
- எங்கள் டீம் என்று சொல்வதை விட எங்கள் தீமை அண்ணன் சீமான் எடுத்திருக்கிறார்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீமான் எங்கள் வழியில் வந்திருக்கிறார். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன், இத்தனை காலமாக எங்கள் கருத்தியலாக நாங்கள் சொல்லி கொண்டிருந்ததை தற்போது சகோதரர் சீமான் பேச ஆரம்பித்திருக்கிறார்.
எங்கள் கருத்தியலுக்கு கிடைத்திருக்கிற பலமாகவும் இதுவரை நாங்கள் சொல்லிக்கொண்டிருந்த கருத்தியலுக்கு ஆதரவாகவும் இதை நான் பார்க்கிறேன். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.
இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு.
இன்று அண்ணன் சீமான், இன்று நாங்கள் பெரிய புராணம் படிக்கும்போது பிடிக்கவில்லை. பெரியார் புராணம் படிக்கும்போது பிடிக்கிறதா? என்று நாங்கள் சொன்னதை அவர் தொடர்வது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
எங்கள் கருத்தியலை அவர் ஏற்றிருக்கிறார். பாஜகவுக்கு யாரவது ஆதரவாக பேசினால் அவரை பி டீம் சி டீம் என்று சொல்லி விடுகிறார்கள். எங்கள் டீம் என்று சொல்வதை விட எங்கள் தீமை அண்ணன் சீமான் எடுத்திருக்கிறார். அதனால் சீமானை எங்க தீம் பார்ட்னராக எடுத்துக்கொள்ளலாம்.