கோவையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கோலம்
- கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர்.
- வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:
தமிழ்நாட்டில் 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க கூடாது என தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று இந்தி மொழியை அழித்து பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்தநிலையில் இந்திமொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு வாசலில் கோலம் போட வேண்டும் என கூறப்பட்டது.
கோவை மாநகர், மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில் கோலமிட்டனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர்.
அதில் இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம். இந்தி மொழியை திணிக்காதே. தமிழ் வாழ்க என்று எழுதி கோலம் போட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் தி.மு.க. பகுதி செயலாளர் நாகராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, வட்டச் செயலாளர் ஜெபமாலை தாஸ், சந்திரசேகர் மற்றும் தி.மு.க. மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.