தமிழ்நாடு

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பால், ஆரவாரம் இன்றி பிரசாரம் செய்யும் தி.மு.க-நாம் தமிழர் கட்சி

Published On 2025-01-23 11:11 IST   |   Update On 2025-01-23 11:11:00 IST
  • அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்கலோ, நிர்வாகிகளோ பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.
  • இதுவரை உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இறந்ததை தொடர்ந்து வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போன்று காங்கிரஸ் கட்சியே இந்த முறையும் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தி.மு.க. நேரடியாக களம் இறங்கியது.

2026-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுவதால் தி.மு.க. தலைமை காங்கிரஸ் தலைமையிடம் பேசி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்கியது. தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.

இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று தி.மு.க-நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 46 பேர் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நிற்கின்றனர். இதில் தி.மு.க-நாம் தமிழர் கட்சி 2 மட்டும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். 4 சிறிய கட்சிகள், 40 சுயேட்சைகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளனர்.

தி.மு.க.வினர் கடந்த 15-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 பிரிவாக பிரித்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று தி.மு.க. அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் கூட்டணி கட்சித் தலைவர்களும் உடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 33 வார்டுகள் அடங்கியுள்ளன. இதில் தற்போது வரை தி.மு.க.வினர் 20 வார்டுகளில் பிரசாரத்தை முடித்துள்ளனர். காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் தி.மு.க.வினர் மதியம் 12 மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

பின்னர் தேர்தல் பணிமனைக்கு வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் தி.மு.க.வினர் இரவு 9 மணி வரை பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆரவாரமும் இன்றி, பரபரப்பும் இன்றியும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இதுவரை உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிற அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்கலோ, நிர்வாகிகளோ பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.

இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அனுமதி இன்றி பிரசாரம்தான் மேற்கொண்டதாக சீதாலட்சுமி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சீதாலட்சுமி உடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் 5 பேர் முதல் 8 பேர் வரை மட்டுமே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் ஈரோடு தேர்தல் களம் இந்த முறை களை இழந்து காணப்படுகிறது. நேற்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பிரசாரம் மேற்கொண்டார். அதுதவிர இன்று வரைக்கும் வேறு தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.


நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக அக்காட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொள்ள ஈரோடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வருகிறார் என தேதி முடிவாகவில்லை.

சமீபகாலமாக சீமான் பெரியார் குறித்து தெரிவிக்கும் கருத்து சர்ச்சை ஆகி வரும் நிலையில் அவருக்கு எதிராக ஈரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் அவர் பிரசாரம் மேற்கொண்டால் அதை தடுத்து நிறுத்துவோம் என பல்வேறு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் இனி வரக்கூடிய நாட்களில் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News