கதிர் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல்- அமலாக்கத்துறை தகவல்
- 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடந்தது.
- கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டரில் கிடைத்த தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.
சென்னை:
அமைச்சர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த். வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் வீடு, துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. பிரமுகர்கள் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 3 நாட்கள் தொடர்ந்து சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது டிஜிட்டல் பண பரிவரித்தனை, அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டரில் இருந்த ஆவணங்கள், கல்லூரியில் பணம் வைக்கப்படும் அறை ஆகியவற்றை அதிகாரிகள் சல்லடை போட்டு அலசினார்கள். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் பற்றி இதுவரை அமலாக்கத்துறை தகவல் எதுவும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் கதிர்ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரை உடைத்ததில் அதில் இருந்து ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கதிர் ஆனந்தின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை திரட்டி வருவதாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டரில் கிடைத்த தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.