தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

Published On 2025-01-12 09:52 IST   |   Update On 2025-01-12 11:39:00 IST
  • வாக்குப்பதிவுக்கு 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
  • முதல் கட்ட சரிபார்ப்பு பணி நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.

ஈரோடு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 237 வாக்குச்சாவடி மையங்களில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவுக்கு 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணி பெங்களூரு பெல் நிறுவனத்தின் மூலம் கடந்த 6-ந்தேதி முதல் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடைபெற்று வந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி முடிவுற்ற பின்னர், இந்திய தேர்தல் ஆணையம் 5 சதவீதம் மாதிரி வாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்ட சரிபார்ப்பு பணி நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இந்த பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

மேலும் மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், 19 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயிற்சி நடத்துவதற்காக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இந்த ஆய்வின்போது, ஈரோடு ஆர்.டி.ஓ.ரவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முஹம்மது குதுரத்துல்லா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News