எப்.ஐ.ஆர். கசிவு- காவல் துறை மீது நீதிபதிகள் அதிருப்தி
- மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது
- பாதிக்கப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில் முதல் தகவல் அறிக்கை உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து (சுமோட்டாவாக) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்பு வரலட்சுமி தரப்பு வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் நேற்று முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
இந்த வழக்குகளை நேற்று மாலை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல, எங்களை பொறுத்தவரை இந்த பாலியல் வழக்கின் புலன் விசாரணையில் தலையிட விரும்பவில்லை. எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி? அதற்கு யார் பொறுப்பு? இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை நாளை மீண்டும் விசாரிக்கின்றோம் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர். கசிந்தது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியானதற்கு தொழில்நுட்ப தவறே காரணம் என்று உள்துறை செயலாளர் தரப்பில் கூறப்பட்டது.
மாணவி தொடர்பான எப்.ஐ.ஆர். காவல் துறை வெளியிடவில்லை என தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர். கசியவில்லை என எப்படி உறுதியாக கூற முடியும். எப்.ஐ.ஆரை யாரெல்லாம் பதிவிறக்கம் செய்தார்கள் என கண்டுபிடிக்க வசதி உள்ளது. ஏன் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவி மீது குறை கூறும் வகையில் முதல் தகவல் அறிக்கை உள்ளது. புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது என்று அதிருப்தி தெரிவித்தனர்.