'கூகுள் மேப்' பார்த்து சொகுசு பங்களாக்களை தேடி கொள்ளையடித்த ஞானசேகரன்- போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
- சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார்.
- மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனிடம் விசாரணை நடத்துவதற்காக பள்ளிக்கரணை போலீசார் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்தனர். அவரிடம் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஞானசேகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-
ஞானசேகரன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து ஆட்டோ மற்றும் காரில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். குறிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளின் பின்பக்கம் வழியாக சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.
சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிக்கரணையில் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கும் போது வெளிமாநில கூட்டாளி ஒருவரை ஞானசேகரன் அழைத்து சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது.
அவர் கொள்ளையடிப்ப தற்கு 'கூகுள் மேப்' பார்த்து சொகுசு பங்களாக்களை தேடினார். ஆட்கள் இல்லாத பங்களாக்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்குள் ஆட்டோ, கார், ஜீப் ஆகியவற்றில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
7-வது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஜீப்பில் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளை அடகு கடையில் விற்று, ஒரு பங்கை 3 மனைவிகளுக்கும் பிரித்துக்கொடுத்தார். மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
அவர் இதுவரை 250 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் கானத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது சுமார் 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறை சென்று வந்த பின்னர் திருந்தி வாழ போவதாக கூறி, பிரியாணி கடை நடத்தினார். காலையில் பிரியாணி கடை நடத்திவிட்டு, இரவில் காரில் சென்று சென்னை புறநகர் பகுதிகளில் கைவரிசை காட்டினார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஞானசேகரனை 7 கொள்ளை வழக்குகளிலும் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், கொள்ளையடித்த நகைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அவரிடம் இருந்து இதுவரை சுமார் 100 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள 150 பவுன் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வர்த்தகத்தில் போட்ட பணத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.